
நுவரெலியா – மீபிலிமான பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த தம்பதியினர் விஷ வாயுவைச் சுவாசித்தமையால் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 52 மற்றும் 46 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஆண், கப்பல் மாலுமியாகக் கடமையாற்றியவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மீபிலிமான பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுற்றுலா விடுதியொன்றின் பணிகளில் ஈடுபட்டு வந்த இவர்கள், அப்பணி நிறைவடையும் வரை அதற்கு அருகிலுள்ள வாடகை வீடொன்றில் தற்காலிகமாகத் தங்கியிருந்துள்ளனர்.
நுவரெலியாவில் நிலவும் கடும் குளிர் காரணமாக, அறையை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளும் நோக்கில் பார்பிகியூ அடுப்பைப் பற்றவைத்து அறைக்குள் வைத்தவாறே இவர்கள் உறங்கச் சென்றுள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை உறவினர்கள் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முயன்றபோது, அழைப்புகளுக்குப் பதிலளிக்காமையால் சந்தேகமடைந்த உறவினர்கள் பகுதி கிராம உத்தியோகத்தருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். கிராம உத்தியோகத்தர் சென்று பார்த்தபோதே இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, நுவரெலியா பிராந்தியத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்கவின் வழிகாட்டலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.