அடக்குமுறைகள் மூலம் ஆட்சியை நடத்தும் தேவை எமக்குக் கிடையாது! – பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவிப்பு

கடந்த ஈராண்டு கால ஆட்சியில் அரசுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பல்வேறு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான அடக்குமுறை நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கவில்லை என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் போராட்டங்களும் முறையான நடைமுறைகளுக்கு அமைய இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“தடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் இருந்த போதிலும், அவற்றைப் பயன்படுத்தி மக்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவில்லை. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்களும், போராட்டங்களும் இடம்பெற்ற போதிலும் அவற்றுக்கு எதிராக அடக்குமுறை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக நாம் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளதுடன், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். பழைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.

மக்களையும் ஊடகங்களையும் அடக்குவதற்கான எந்தவொரு தேவையும் அரசுக்கு  இல்லை. சில ஊடகங்கள் தங்களுடைய தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்பட்ட போதிலும், உண்மையான செய்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள். குறிப்பிட்ட ஊடகங்களை இலக்குவைத்து அரசு தலையிட வேண்டிய அவசியம் கிடையாது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சியினருக்கு உரிமை உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தின் அடிப்படை விதிமுறைகளையும் உரிய நடைமுறைகளையும் பின்பற்றி அதனைச் சமர்ப்பிக்க வேண்டும். நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலும், செயலாளர் பிரிவிலும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதனையும் மீறி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு அருகில் சென்று பதாகைகளை ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். இவ்வாறான அரசியல் நாடகங்களால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகின்றது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் சார்ந்த அரசாகவே நாம் தொடர்ந்தும் செயற்படுகின்றோம்.” – என்றார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்