அமெரிக்காவின் 17 மில்லியனுக்காக சீனாவின் 392 மில்லியன் டொலரை இழந்துவிட்டோம்! – முஜிபுர் ரஹ்மான் விசனம்

அரசின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு, சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“துறைமுகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசு அமெரிக்காவிடமிருந்து 17 மில்லியன் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, அப்பகுதியில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டு வேலைத்திட்டம் எமக்கு இல்லாமலாகியுள்ளது. துறைமுகத்தில் சீனாவின் வேலைத்திட்டத்துக்கு அருகில் அமெரிக்காவின் கமராக்களைப் பொருத்துவதற்கு எடுத்த அரசின் பிழையான முகாமைத்துவமே இதற்கு முழுமையான காரணமாகும்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய ஒலிபரப்புச் சங்கத்தின் மாநாட்டுக்கு  அரசு 10 கோடி ரூபா வழங்கியுள்ளது. ‘இந்த நிதி அரசின் பணம் அல்ல’ என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார். அப்படியென்றால், அந்தப் பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ஏன் அமைச்சரவைக்கு மகஜர் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்? சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்குச் செலவிடப்படும் நிதி திறைசேரியின் பணமாகும். அது மக்களின் பணமாகும்.

2014ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி பஸில் ராஜபக்ஷ அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில், அவரை உடனே கைது செய்யுமாறு நீதிமன்றம் பகிரங்க உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், ஜனாதிபதிக்கும் இந்த உத்தரவு செல்லுபடியாக வேண்டும்.

கொழும்பு – மாளிகாவத்தையிலுள்ள பி.டி. சிறிசேன குரே மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்கள் இடம்பெறுவதால், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் அந்த மைதானம் மூடப்பட்டுப் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் கால்பந்தாட்டப் பயிற்சிகளை மேற்கொள்வதும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதுமான இந்த மைதானம் மூடப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘பிரபுக்கள் பாதுகாப்புத் தேவையில்லை’ என்று கூறியவர்கள், தற்போது யுத்த காலத்தில் கூட இல்லாதவாறு பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.” – என்றார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்