500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு – பிரித்தானியாவில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு!
பிரித்தானியாவில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சியையும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பாட்டையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு, ஒக்டோபர் 31ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் கலந்துகொண்டனர்.
தமிழ்மொழிக் கல்வியின் தரத்தை உயர்த்துதல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் நவீன கற்பித்தல் அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு. செல்வராஜா முரளீதரன் OAM அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், பிரான்சிலுள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமைச் செயலகத்திலிருந்து வருகை தந்த மேலாளர் திருமதி நகுலேஸ்வரி அரியரத்தினம் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றார்.
செயலமர்வின்போது ஆசிரிய வளவாளர்கள் தங்களது பட்டறிவுகளையும் கற்பித்தல் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரித்தல், கற்பித்தல் முறைகளில் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் தமிழ்க் கல்வியின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு இடையே அனுபவப் பகிர்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழியையும் அதன் கல்விப் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியில் ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதும் இச்செயலமர்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்வின் வெற்றிக்குப் பங்களித்த ஆசிரியர்கள், வளவாளர்கள், நிர்வாகிகள், இளையோர் மற்றும் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் தமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
“தமிழால் ஒன்றிணைவோம்! தமிழைக் கற்போம்! தமிழால் வளர்வோம்! தமிழால் சந்திப்போம்!” என்ற உணர்வுடன் இச்செயலமர்வு நிறைவடைந்தது.






