பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது இலங்கை நாடாளுமன்றம்!

வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, இலங்கை நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணிக்குச் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. சபை அமர்வுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளன.

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த வாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 50 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கி முன்வைக்கப்பட்ட குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் திருத்தி மீண்டும் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இந்த வாரம் அந்தப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வரவு – செலவுத் திட்டக் கூட்டத் தொடர் ஒரு மாத காலம் நடைபெறவுள்ளதுடன், டிசம்பர் மாதம் முதல் ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்றத்துக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதனால், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இந்த வருடத்துக்குள் விவாதத்துக்கு  எடுத்துக்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரியவருகின்றது.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

அத்துடன், பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளிடமும் இது குறித்து முறைப்பாடு செய்வதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிறப்புச் செய்திகள்

Related News