
ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்து வெளியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் திகதி ‘சோனி லிவ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியிசைத் துறையில் ராப் பாடகராகத் தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனத் தமிழ்ச் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். ‘ஆம்பள’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், அதனைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதற்கிடையில், ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டது.
இந்தத் திரைப்படம் உலகளவில் 55 கோடி இந்திய ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படமும் இரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், திரையரங்குகளில் வெற்றிநடை போட்ட ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் திகதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.