
அமெரிக்காவில் ஜனாதிபதியின் 4 ஆண்டு பதவிக்காலத்தின் மத்தியில் நடைபெறும் நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது.
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல என்ற போதிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பதைத் தீர்மானிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. மேலும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசியல் செல்வாக்குக்கும், அவரின் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய பரிசோதனையாக அமையும்.
அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள அனைத்து 435 இடங்களுக்கும், செனட் சபையில் உள்ள 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால் தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகின்றது.
அதன்படி, இந்த முறை 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சிப் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது.
தற்போதைய நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியே சிறிய பெரும்பான்மையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில், குடியரசுக் கட்சி சரியாக 218 இடங்களையும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 214 இடங்களையும் கொண்டுள்ளன.
அதேபோல, செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவைப்படும் நிலையில், குடியரசுக் கட்சி 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 47 இடங்களையும் தன்வசம் வைத்துள்ளன.
நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தும் கட்சியே ஜனாதிபதியின் ஆட்சி நிர்வாகத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்த முடியும். புதிய சட்டங்களை நிறைவேற்றுதல், அரசின் செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்தல், முக்கிய நியமனங்களை உறுதி செய்தல் போன்ற அதிகாரங்கள் நாடாளுமன்றத்திடமே உள்ளன.
ஒருவேளை தேர்தல் முடிவில் ஜனநாயகக் கட்சி ஏதாவது ஒரு அவையைக் கைப்பற்றினால், ஜனாதிபதி ட்ரம்ப் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதிலும், வரவு – செலவுத் திட்ட விவாதங்களிலும் பெரும் சிக்கலைச் சந்திக்க நேரிடும். அத்துடன், அவரின் நிர்வாகத்துக்கு எதிரான விசாரணைகள் தீவிரமடையவும், பதவி நீக்கத் தீர்மான விவாதங்கள் மீண்டும் எழவும் வாய்ப்புள்ளது.
இந்தத் தேர்தலில் விலைவாசி உயர்வு, குடியேற்றப் பிரச்சினை, பொருளாதாரம் ஆகியவை வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஈரான் விவகாரம் உள்ளிட்ட வெளியுறவுக் கொள்கைகளும் பிரதான அரசியல் விவாதமாக மாறியுள்ளன.
பொதுவாக இடைக்காலத் தேர்தல்கள் ஆளும் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கான பொது வாக்கெடுப்பாகவே பார்க்கப்படுவதால், ட்ரம்ப் மீதான மக்களின் மதிப்பீடும் தேர்தல் முடிவுகளில் கணிசமாகப் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களுக்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி, சுமார் 50 சதவீத வாக்காளர்கள் (தபால் வாக்கு உட்பட) வாக்களித்துவிட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை (நவ. 03) இறுதிநாள் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஏற்ப வாக்குப்பதிவு நேரங்கள் மாறுபடும்.
இலங்கை நேரப்படி நாளை புதன்கிழமை (நவ. 04) காலை 4.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த தொகுதிகளில் உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், கடும் போட்டி நிலவும் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகக் காலதாமதமாகலாம். உத்தியோகபூர்வமான இறுதி முடிவுகள் வெளியாவதற்குப் பல நாள்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.
தேர்தல் முடிவுகளில் ஏதேனும் இழுபறியோ அல்லது நெருக்கமான வாக்கு வித்தியாசமோ இருந்தால் மறுவாக்கு எண்ணிக்கை, நீதிமன்ற வழக்குகள் மற்றும் வாக்குச்சீட்டு செல்லுபடியாகும் தன்மை குறித்த சர்ச்சைகள் எழ வாய்ப்புள்ளது.
அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின்படி, தேர்தல் முடிவுகள் குறித்த சவால்களைத் தீர்த்துவைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கே உள்ளது. வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சில தொகுதிகளின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டால், அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய நாடாளுமன்றம் கூடும்போது அதன்மூலம் இறுதி முடிவு எடுக்கப்படும்.
அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தலில் களம்காணும் வேட்பாளர்களில் இந்திய வம்சாவளியினரின் பங்கு இந்த முறையும் கணிசமாக உள்ளது.
ஜனநாயகக் கட்சி சார்பில் ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள ரோ கன்னா (கலிஃபோர்னியா), பிரமிளா ஜெயபால் (வாஷிங்டன்), அமி பேரா (கலிஃபோர்னியா), சுஹாஸ் சுப்ரமணியம் (வர்ஜீனியா) ஆகியோர் மீண்டும் நாடாளுமன்றக் கீழவைக்குப் (பிரதிநிதிகள் சபை) போட்டியிடுகின்றனர்.
ஆளும் குடியரசுக் கட்சி சார்பிலும் முக்கியப் பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். ஒஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவுடன் விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளார். இதேபோல, நியூயார்க் மாகாண அட்டாணி ஜெனரல் பதவிக்குக் குடியரசுக் கட்சி சார்பில் சரிதா கோமட்டி ரெட்டி போட்டியிடுகின்றார்.
இவர்களைத் தவிர பல்வேறு மாகாண மற்றும் உள்ளூராட்சிப் பதவிகளுக்கும் இந்திய வம்சாவளியினர் பலர் போட்டியிடுகின்றனர். லாஸ் ஏஞ்சலீஸ் நகர மேயர் பதவிக்கு நித்யா ராமன், அரிஸோனா மாகாணத்தின் 1ஆவது நாடாளுமன்றத் தொகுதிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் மருத்துவர் அமிஷ் ஷா, டெக்சாஸ் மாகாணக் கீழவைக்கு தொழிலதிபர் சந்தீப் ஸ்ரீவத்சவா, ஃபுளோரிடா மாகாணத்தில் பியா தண்டியா ஆகியோரும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல் களத்தில் உள்ள முக்கிய இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் ஆவர்.