
கண்டி, பல்லேகலை – தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை சிறைச்சாலை மதிலை ஒட்டியுள்ள பாதுகாப்புச் சாவடிக்கு ஏறிய மேற்படி கைதி, அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பல்லெதென்ன தெரிவித்தார்.
இதன்போது தப்பிச் செல்ல முயன்ற கைதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்த அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியாவார்.
இவர் கண்டி – கலாஹேடர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.