வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட கலந்துரையாடல்! (Photos)

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நாட்டில் தற்சமயம் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களின் மக்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, அந்தப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தகவல்கள் விரிவாகப் பெறப்பட்டன.

குறிப்பாக, எரிபொருள் விலை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான தாக்கங்கள், தற்போதைய பொருளாதாரச் சூழலில் மக்களின் வருமான மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளமை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் உழைக்கும் மக்களின் குடும்பப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள் மற்றும் சுகாதாரம், கல்வித் துறைகளில் நிலவும் கடுமையான பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

தரமான சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தடைகள், பாடசாலைக் கல்வியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சிறுவர்களின் போசாக்கு நிலைமை வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பிலும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தாஹிர் மரிக்கார், துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கோவிந்தன் ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமாலெப்பை, கே. காதர் மஸ்தான், வைத்தியர் பி. சத்தியலிங்கம் மற்றும் ஹபீப் ரிபான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்