திலீபன் நினைவுத்தூபி அகற்றல் கடிதத்தைத் தூக்கி எறிந்தேன்! – யாழ். மேயர் மதிவதனி தெரிவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை அகற்றுமாறு யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ். மாநகர சபைக்கு வழங்கப்பட்ட கட்டளையைத் தான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றும், அந்தக் கட்டளைக் கடிதத்தைத் தூக்கி ஓரமாகப் போட்டுவிட்டார் என்றும் யாழ். மாநகர சபையின் மேயர் திருமதி வி.மதிவதனி தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வில் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பான காரசாரமான விவாதம் இடம்பெற்றபோதே மேயர் இவ்வாறு கூறினார்.

கடந்த மாத இறுதிப் பகுதியில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மாநகர மேயர் உள்ளிட்ட பலரிடம் பொலிஸாரின் குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மேற்குப் புறத்திலுள்ள காணியைத் தனியாருக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பான விடயம் இந்தச் சபை அமர்வில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த மேயர் மதிவதனி, “நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியல் நோக்கங்களுக்காக எவரும் தடுக்கவோ அல்லது குழப்பங்களை ஏற்படுத்தவோ முயற்சிக்காமல், அதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

இம்முறை தியாக தீபம் திலீபனின் நினைவுச்சிலை அமைப்பதற்கான அனுமதி தொடர்பான விடயத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டதால், இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளை மிகவும் அவதானத்துடனும் இறுக்கமான நடைமுறைகளின் அடிப்படையிலும் கையாள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் தர்சானந்த், யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகம் மற்றும் யாழ். மத்திய பொலிஸ் நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் மாநகர சபையின் உத்தியோகபூர்வ அனுமதியின்றியே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். அவ்வாறான நிலையில், தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை மாத்திரம் சட்டவிரோதக் கட்டுமானம் எனக் கூறி அகற்றுமாறு மாநகர சபையைக் கோருவதற்குப் பொலிஸாருக்கு என்ன அருகதை இருக்கின்றது என்றும் அவர் கடுமையாகக் கேள்வி எழுப்பினார்.

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமாயின், மாநகர சபையின் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஏனைய பொதுக் கட்டடங்கள் தொடர்பிலும் மாநகர சபை உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளைத் தடுப்பதற்குப் பொலிஸாரும் அரச தரப்பினரும் முயல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்