
பெற்றோர் பிரான்சிலும் சகோதரன் இந்தியாவிலும் வசித்து வரும் நிலையில், படகு மூலம் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாம்பன் பகுதியில் வைத்துத் தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 21 வயதுடைய மேற்படி இளைஞர், இந்தியாவில் தங்கியுள்ள தனது சகோதரனைச் சந்திப்பதற்காகப் படகு மூலம் சட்டவிரோதமாகத் தமிழகக் கடற்கரையைச் சென்றடைந்தபோதே பொலிஸாரின் கண்காணிப்பில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவில் தங்கியிருந்த வீட்டில் தனது சித்தியாருடன் ஏற்பட்ட கை கலப்பு மற்றும் தொடர்ச்சியான குடும்ப முரண்பாடுகள் காரணமாகவே, மனவேதனையில் தனது சகோதரனைத் தேடித் தமிழகத்துக்கு வந்ததாகக் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆரம்பக் கட்ட விசாரணைகளின்போது தமிழகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாகப் படகுப் போக்குவரத்து பின்னணி மற்றும் சட்டவிரோதக் ஊடுருவல் குறித்து தமிழகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.