யாழில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் ஒருவர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – கட்டுவன் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வறுத்தலைவிளான் பகுதியைச் சேர்ந்த 65 வயதான முதியவரே இந்தச் சோகச் சம்பவத்தில் பலியானவராவார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

உயிரிழந்த முதியவர் இன்று கட்டுவன் வீதியில் தனது சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது அதே வீதியில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து முதியவரின் சைக்கிளுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது தலையில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இளைஞரும் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த முதியவரின் சடலத்தை மீட்ட தெல்லிப்பழை பொலிஸார், பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமையுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறப்புச் செய்திகள்

Related News