.

யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் சஞ்சய் (வயது 17) மற்றும் நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ரஜீவன் (வயது 36) ஆகியோரே இந்தச் சோகச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் அதிவேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில், அளவெட்டி – அழுக்கைச் சந்திப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பில் தகவலறிந்த தெல்லிப்பழை பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து, உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டுப் பிரேத பரிசோதனைகளுக்காகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாகத் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.