
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தேர்தலுக்குப் பிந்தைய முதற்கட்டக் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்தவொரு தரப்பும் அந்த மைல்கல்லை எட்டவில்லை எனத் தெரிகின்றது.
தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின்படி,
தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கு 50 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம்.
முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் 50 முதல் 52 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
இஸ்ரேலின் முன்னணி இரு தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகளின்படி, காடி ஐசன்கோட்டின் ‘யாஷார்’ கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 51 ஆசனங்களையும், நெதன்யாகுவின் ‘லிகுட்’ கட்சி தலைமையிலான தீவிர வலதுசாரிக் கூட்டணி 51 ஆசனங்களையும் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது தொலைக்காட்சி நிறுவனம் நெதன்யாகுவின் கூட்டணி 3 ஆசனங்கள் முன்னிலையில் இருப்பதாகக் கணித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது 77.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிலும், 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு என்றும் அந்த நாட்டின் மத்திய தேர்தல் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தலில் அரபுக் கட்சிகள் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன. இந்தக் கட்சிகள் சாதனை அளவாக 18 முதல் 19 ஆசனங்கள் வரை கைப்பற்றக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இராணுவத்தினரால் அளிக்கப்பட்ட சுமார் 6 இலட்சம் தபால் மூல வாக்குகள் (மொத்த வாக்குகளில் 10%) எண்ணப்பட்டு முடிவுகள் முழுமையாக வெளியாக நாளை வியாழக்கிழமை வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலிய ஜனாதிபதி அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசனை நடத்துவார். அதன் பின்னர், ஆட்சியை அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கட்சித் தலைவரை ஆட்சியமைக்க அழைப்பார்.
இந்தச் செயன்முறைகள் நிறைவடையப் பல வாரங்கள் ஆகலாம் என்பதுடன், எந்தவொரு தலைவராலும் பெரும்பான்மையை நிரூபித்து அரசை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டின், இஸ்ரேல் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டி வரலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.