பஸ்ஸுடன் கொள்கலன் லொறி மோதி விபத்து! – மயிரிழையில் தப்பிய பல உயிர்கள்

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் டொப் பாஸ் தோட்டப் பகுதியில் கொள்கலன் லொறியொன்று இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாகப் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு பல உயிர்கள் மயிரிழையில் தப்பியுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா – கண்டி பாதையின் ஆபத்தான வளைவொன்றில் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் லொறி, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்து வந்து பின்னால் வந்த இ.போ.ச. பஸ்ஸுடன் பலமாக மோதியுள்ளது.

எனினும், விபத்து இடம்பெற்ற கணத்தில் கொள்கலன் லொறியின் பிரேக் கட்டமைப்பு உரிய நேரத்தில் செயற்பட்டதன் காரணமாக லொறி நிறுத்தப்பட்டு பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரேக் கட்டமைப்பு செயற்படத் தவறிருப்பின், பல உயிர்களைப் பலிகொள்ளக்கூடிய மிகச் மோசமான விபத்து நேர்ந்திருக்கும் எனக் கருதப்படுகின்றது.

இந்த விபத்து இடம்பெற்ற விதம், சம்பவ இடத்துகுப் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டாஷ் கமராவில் முழுமையாகப் பதிவாகியுள்ளது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆபத்தான வளைவுகள் மற்றும் சரிவுகள் நிறைந்த நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் அதிக அவதானத்துடனும் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இந்தத் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்