இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய குடும்பஸ்தர் மர்மச் சாவு! – நீரோடைக் கால்வாயிலிருந்து சடலம் மீட்பு

உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், நீரோடைக் கால்வாயிலிருந்து இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பொகவந்தலாவை செப்பல்டன் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாகராஜா (வயது 46) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-

மேற்படி நபர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோரா தோட்டத்தில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார். அதன் பின்னர் அவர் அங்கிருந்து தனது வீட்டிற்கு நடந்தே புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வழியில் கெசெல்கமு ஓயாவுக்குச் செல்லும் நீரோடை கால்வாயில் அவர் மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரவு வேளையில் வீடு திரும்பியபோது, அவர் தவறி கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்