இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் த்ரில் வெற்றி! – மும்முனைத் தொடரைக் கைப்பற்றியது

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் கடைசி வரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியில் 3 விக்கெட்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சம்பியனானது.

326 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 48.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டிச் சம்பியனானது.

இந்தப் போட்டியில் கமிந்து மெண்டிஸ் குவித்த சதம் வீண் போனதுடன் பக்கார் ஸமானின் சதம் பெரிதாக எடுபடவில்லை. ஏனெனில் மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்களாக இருந்தபோது அவர் ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. மாஸ் சதாகத் (5), பாபர் அஸாம் (0) ஆகிய இருவரும் முதல் 4 ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர்.

எனினும் பக்கார் ஸமான், சாத் பெய்க் (74) ஆகிய இருவரும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்குத் தெம்பூட்டினர்.

தனது 5ஆவது போட்டியில் விளையாடும் சாத் பெய்க் கன்னி அரைச் சதம் குவித்து  இரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

பக்கார் ஸமான் 99 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 127 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரும் சல்மான் அகாவும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் நெருக்கடிக்குள்ளானது. (230 – 5 விக்.)

ஆனால் மத்திய வரிசை வீரர்களான அரபாத் மின்ஹாஸ், ஹசன் நவாஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 94 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்குச் சார்பாக திருப்பு முனையை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், அரபாத் மின்ஹாஸ், பாஹீம் அஷ்ரவ் ஆகிய இருவரையும் 48ஆவது ஓவரில் அசித்த பெர்னாண்டோ அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழக்கச் செய்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், டில்ஷான் மதுஷன்கவின் 49ஆவது ஓவரில் ஷஹீன் ஷா அப்றிடி சிக்ஸ் ஒன்றை விளாசி பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தார்.

மின்ஹாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களை விளாசினார். அவர் பெற்ற இரண்டாவது ஒருநாள் அரைச் சதம் இதுவாகும்.

ஹசன் நவாஸ் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் டில்ஷான் மதுஷன்க 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த  பெர்னாண்டோ 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 325 ஓட்டங்களைக் குவித்தது.

அவிஷ்க பெர்னாண்டோ (38), கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டம் இழந்த பின்னர் களம் நுழைந்த அணித் தலைவர் குசல் மெண்டிஸ் மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

ஆனால், இந்தத் தொடரில் அற்புதமாக துடுப்பெடுத்தாடி வந்த பவன் ரத்நாயக்க 3ஆவது விக்கெட்டில் கமிந்து மெண்டிஸுடன் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 250 ஓட்டங்களைக் கடக்க உதவினார்.

கமிந்து மென்டிஸ் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 126 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.

தனது 37ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் குவித்த கன்னிச் சதம் இதுவாகும்.

பவன் ரத்நாயக்க 8 பவுண்டறிகளுடன் 77 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்தத் தொடரில் அவர் 5 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 427 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

மத்திய வரிசை வீரர்களிடம் இருந்து பெரிய பங்களிப்பு கிடைக்காதது இலங்கைக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பந்துவீச்சில் சல்மான் அகா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஷஹீன் ஷா அப்றிடி 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஹரிஸ் ரவூப் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்