
சர்வதேசப் பொலிஸாரின் சிவப்புப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, உலகின் 13 வெவ்வேறு நாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த 112 குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை விரைவில் கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்தார்.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக இன்று வியாழக்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்துப் பகிர்ந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
“அடையாளம் காணப்பட்டுள்ள 112 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கு அழைத்து வர முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அவர்கள் அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர், அவர்களுக்கு எதிராகச் சட்டத்தை மிகக் கடுமையாக அமுல்படுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
இந்தச் சந்தேகநபர்கள் அனைவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழு நடவடிக்கைகளின் மூலமே சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணத்தைச் சம்பாதித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட சட்டவிரோதச் சொத்துகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் மற்றும் நிதிப்பரிமாற்றங்கள் தொடர்பில் பொலிஸாரின் இரண்டு விசேட புலனாய்வுப் பிரிவுகள் ஊடாக 24 மணி நேரமும் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.