லண்டனில் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

லெப்டினன் கேணல் புலேந்திரன், லெப்டினன் கேணல் குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியாவின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெற்றது.

லண்டன் மிச்சம் (Mitcham) பகுதியில் அமைந்துள்ள Ascension Church Hall மண்டபத்தில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில், நினைவேந்தல் நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் ஆரம்பமாகப் பொதுச்சுடரினைத் திருமதி கமலாவதி கந்தாங்கரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை லெப். கேணல் புலேந்திரனின் புதல்வர் ஏற்றிவைத்தார்.

இதனையடுத்து ஈகைச்சுடரைத் திருமதி ரஜனி ஏற்றிவைத்தார். தொடர்ந்து நினைவுத் திருவுருவப் படங்களுக்குத் திருமதி சுபாசினி மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் வணக்கமும் தீப வணக்கமும் செலுத்தினர்.

நினைவு வணக்க நிகழ்வின் அடுத்த கட்டமாகக் கவிதைகள், நினைவுரைகள், சிற்றுரைகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

இதன்போது தாஸ் மற்றும் கிருபாகரன் ஆகியோர் நினைவுக் கவிதைகளை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து நாட்டியாலயா நடனப் பள்ளியின் ஆசிரியர்களான திருமதி ராகினி ராஜகோபால் மற்றும் திருமதி ஷாமினி கண்ணன் ஆகியோரின் மாணவிகள் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர்.

நிகழ்வின் தொடர்ச்சியாகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நியூட்டன் நினைவுரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து கணேசலிங்கம் சூரியகாந்தன் சிற்றுரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றுவதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த மல்லை இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த மல்லை சத்யா சிறப்புரையாற்றினார்.

நிகழ்வின் இறுதியில் ‘நம்புங்கள் தமிழீழம்’ பாடல் ஒலிவடிவில் ஒலிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடி கையேந்தப்பட்டு, உறுதிமொழியுடன் லெப். கேணல் புலேந்திரன், லெப். கேணல் குமரப்பா உள்ளிட்ட 12 பேரின் 39ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நிறைவடைந்தது.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்