
கனடா, டொரண்டோவின் பிரைடில் பாத் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பேவியூ மற்றும் லாரன்ஸ் அவென்யூ பகுதிகளுக்கு அருகாமையில் அதிகாலை 3:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பொலிஸார், அந்த வீட்டுக்குள் மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேலும் ஒருவர் பின்னர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், காயமடைந்தவர்களின் நிலைமை குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய மூன்று சந்தேகநபர்கள் எஸ்.யு.வி ரக காரில் தப்பிச் சென்றுள்ளனர் எனவும், சந்தேகநபர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
