ஜனநாயகத்தைக் காக்க ஒன்றிணைவோம்! – நவம்பர் 1 பேரணியில் பங்கேற்க ராகுல் அழைப்பு

வரும் நவம்பர் முதலாம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள ராம்லீலா பேரணியானது இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான பேரணி எனக் குறிப்பிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, இதில் கட்சி வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இப் பேரணி தொடர்பில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சிறப்பு காணொளிச் செய்தியிலேயே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

காணொளியில் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி:-

“டில்லி ராம்லீலா பேரணியானது ஜனநாயகத்தைக் காக்கவும், வாக்குத் திருட்டைத் தடுக்கவும், இந்திய அரசமைப்பைப் பாதுகாப்பதுக்குமானது. இது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டுமேயான பேரணி அல்ல. மாறாக இது இந்தியாவின் ஆன்மாவைக் காப்பதற்கான பேரணியாகும்.

நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த அனைவரும் வாருங்கள். ஜனநாயகத்தையும் அரசமைப்பையும் பாதுகாக்க விரும்புபவர்கள் அனைவரும் ஒன்றிணையுங்கள். இது தேசத்தைக் காப்பதற்கான ஒரே போராட்டம்.” – என்றார்.

பொலிஸாரின் கட்டுப்பாடுகள் அல்லது தடியடிகள் குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்த அவர், பா.ஜ.க. அரசின் தந்திரங்களை எதிர்கொள்ள மக்கள் அஞ்சத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்.

“அனைத்து மாணவர் அமைப்புகளுக்கும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். உங்களின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் சரி, இந்திய தேசமும் உங்களின் கருத்துச் சுதந்திரமும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என நீங்கள் உணர்ந்தால் எங்களுடன் வந்து இணையுங்கள்.

இந்திய அரசமைப்பையும் தேசத்தையும் காக்க நாம் ஒன்றிணைந்து நடைபயணம் மேற்கொள்வோம். இது ஒரு மிகச்சிறப்பான வரலாற்று நடைபயணமாக அமையும். உங்கள் அனைவரையும் அங்கே சந்திக்கும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.” – என்றும் ராகுல் காந்தி மேலும் தெரிவித்த்தார்.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்