‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6 இல் ரிலீஸ்! – நாளை இசை, டிரெய்லர் வெளியீடு

நடிகர் சூர்யா, நஸ்லென், நஸ்ரியா நசீம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர் சூர்யாவின் 47 ஆவது திரைப்படமான இதனைப் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகின்றார்.

‘ஆவேஷம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் இத் திரைப்படத்தில் நடிகர் சூர்யா அதிரடி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 100 கோடி ரூபா வரவு – செலவுத் திட்டத்தில் உருவாகும் இத் திரைப்படத்தில் மலையாளத் திரைத்துறை நடிகர்களான நஸ்லென், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ மற்றும் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ ஆகியன இணைந்து இப் படத்தைத் தயாரிக்கின்றன. இத் திரைப்படத்திற்குச் சுஷின் ஷ்யாம் இசையமைக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கருப்பு’ மற்றும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ‘சீன்’ திரைப்படம் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இப் படம் குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

இத் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விசேட அறிமுக நிகழ்ச்சி அண்மையில் டுபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ‘சீன்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் உத்தியோகபூர்வ டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை மாலை 5.00 மணிக்குத் சென்னை தாம்பரத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, தயாரிப்பு நிறுவனமான ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ விசேட புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்