
அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இந்தச் சோகச் சம்பவத்தில், அலஹேனா கிராமத்தைச் சேர்ந்த கே. பியசேன (வயது 76) என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
உயிரிழந்த முதியவர் அப்பகுதியிலுள்ள கல்குவாரி ஒன்றில் கல்வெட்டும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவராவார்.
இன்று காலை தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையில், வீதியோரத்தில் மறைந்திருந்த காட்டு யானை எதிர்பாராதவிதமாக அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.
அலஹேனா, மடவலலந்தா உள்ளிட்ட அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த பல நாள்களாகவே ஒற்றைக் காட்டு யானையொன்று தொடர்ச்சியாக உலா வந்து கொண்டிருக்கின்றது என்று அந்தப் பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் காட்டு யானையின் அச்சுறுத்தலால் கிராம மக்கள் பெரும் அச்சமடைந்திருந்த நிலையிலேயே தற்போதைய உயிரிழப்புச் சம்பவம் சம்பவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளுக்காகச் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தங்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தக் காட்டு யானையை உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
