
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்குத் தி.மு.க. ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, “தேர்தல் திகதி அறிவிக்கப்படட்டும், அதுபற்றி பிறகு பேசலாம்” எனத் தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூசகமாகப் பதிலளித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64 ஆவது குருபூஜை விழாவில் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய மு.க.ஸ்டாலின்,
“நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் நடத்திய விடுதலைப் போராட்டத்துக்கு உறுதுணையாக நின்றவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேய அரசின் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துப் போராடிய இந்தப் பெருமகனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதை நாங்கள் பெருமையாகக் கருதுகின்றோம்.
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பசும்பொன் தேவர் நினைவிட வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காகத் திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டில் ‘முத்துராமலிங்கத் தேவர் அரங்கம்’ திறந்துவைக்கப்பட்டது. தேவரின் நூற்றாண்டு விழாவை 2007 இல் கலைஞர் கருணாநிதி சிறப்பாகக் கொண்டாடியதுடன், மதுரை கோரிப்பாளையத்திலும் ஆண்டாள்புரத்திலும் அவரது நினைவைப் போற்றும் வகையில் பல திட்டங்களை நிறைவேற்றினார்.” – என்றார்.
தற்போதைய தமிழக ஆட்சிப் போக்கினைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர்,
“தமிழகத்தின் தற்போதைய அவல நிலைமை மக்கள் அனைவரும் அறிந்ததுதான். இந்த ஆட்சி வர வேண்டும் என விரும்பி வாக்களித்த மக்கள் அனைவரும், ‘இந்த ஆட்சி எப்போது ஒழியும்’ என்று எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் விலைவாசி விஷம்போல் உயர்ந்துள்ளது; சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது; சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதுடன் திடீர் திடீரெனச் சிறுமிகள் காணாமல்போகும் அதிர்ச்சிச் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பித்து ஓடும் அவலநிலை உருவாகியுள்ளது.
இதைப் பற்றியெல்லாம் தற்போதைய முதலமைச்சர் விஜய் எவ்விதக் கவலையும் படவில்லை. சினிமாவில் ஹீரோவாக நடித்ததை நம்பி, நிஜத்திலும் அவர் ஹீரோவாகச் செயற்படுவார் என நம்பி வாக்களித்த தமிழக மக்கள் இன்று ஏமாற்றத்தில் தவிக்கின்றனர்.” – என்றார்.