
யாழ். மயிலிட்டி மக்களின் பூர்வீகக் காணிகளையும் வாழ்விடங்களையும் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து உடனடியாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனவீர்ப்புப் போராட்டம், இன்று வெள்ளிக்கிழமை 28 ஆவது வாரமாகவும் தொடர்ந்தது.
மயிலிட்டி கொமாண்டோ பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள் திரளாகப் பங்கேற்றுத் தமது பூர்வீக நிலங்களை மீளப் பெற்றுச் சொந்த மண்ணில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், தலைமுறை தலைமுறையாகத் தாம் வாழ்ந்து வந்த சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் கடந்தும், இதுவரை பூர்வீக வாழிடங்களுக்குத் திரும்ப முடியாத அவல நிலை தொடர்வது பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாகத் தெரிவித்தனர்.
தமது குடியிருப்பு நிலங்கள் மட்டுமன்றி, விவசாய நிலங்கள் உள்ளிட்ட பாரம்பரிய வாழ்வாதாரச் சொத்துகளையும் இழந்துள்ளதனால் பொருளாதார ரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.
காணி விடுவிப்புத் தொடர்பாக அரசுக்குத் தமது கோரிக்கைகளை முன்வைத்த போராட்டக்காரர்கள்,
“மயிலிட்டி மக்களின் நீண்டகால நில உரிமைப் பிரச்சினைக்கு இனியும் காலதாமதமின்றி அரசு உடனடித் தீர்வு காண வேண்டும்.
வெற்று வாக்குறுதிகளைத் தராமல், இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள எமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் தெளிவான காலக்கெடுவுடன் கூடிய நடைமுறைச் சாத்தியமான திட்டத்தை அரசு விரைவாக அறிவிக்க வேண்டும்” என்று திட்டவட்டமாக வலியுறுத்தினர்.