அநுர கட்சியின் ஆளுகைக்குட்பட்ட மெதகம பிரதேச சபையின் பட்ஜட் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழ் இயங்கிவரும் மொனராகலை, மெதகம பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தவிசாளர் அஜித் பிரியந்த ரத்நாயக்க தலைமையில் நேற்றுக்  காலை நடைபெற்ற சபை அமர்வின்போது, 2027ஆம் ஆண்டுக்கான நிதியாண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

விவாதத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில், வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும், எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, சர்வஜன பலய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சியின் 9 உறுப்பினர்களும் ஒன்றிணைந்து எதிராக வாக்களித்தமையினாலேயே, இந்த வரவு – செலவுத் திட்டம் ஒரு வாக்கால் வீழ்ச்சியடைந்தது.

தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபை ஒன்றின் வரவு – செலவுத் திட்டம் இவ்வாறு தோற்கடிக்கப்பட்டுள்ளமை அந்தப் பிரதேசத்தில் அரசியல் ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், சபையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் கேள்விக்குறிகளை உருவாக்கியுள்ளது.

சிறப்புச் செய்திகள்

Related News

ஏனைய செய்திகள்