நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது :பிரதமர் மஹிந்த

231 0

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக சர்வதேச ரீதியில் காண்பிக்க சிலர் முயன்றாலும் நாட்டுக்குள் எந்த நெருக்கடி நிலையும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பிராந்தியத்தில் துரித வேகமாக வெற்றியை பெற்றுக்கொண்ட நாடாக இலங்கையை மாற்றி நாட்டின் சகல இன மக்களுக்கும் ஒரேவிதமாக நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தனது இலக்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் மீது எல்லையற்ற வரிகளை விதித்த காலத்தை முடிவுக்குக்கொண்டு வருவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி மற்றும் பொருளாதாரத் துறை அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் நேற்று தமது அமைச்சு அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். இங்கு உரையாற்றிய அவர்,

இலகுவான வரி முறையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் அரசாங்கத்துக்கு வருமானம் தேவையென்ற போதிலும் அதனை மக்களைச் சுரண்டிப் பெற்றுக்கொள்ள முடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியதாவது,

இன்றைய காலகட்டத்தில் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 3 வீதமாக குறைந்து காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு உட்பட சகல துறைகளிலும் வரிச்சுமை அதிகரித்துக் காணப்படுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் வரிகள் அதிகளவில் காணப்படுகின்றது. அத்துடன் அனைத்து வர்த்தகத் துறையும் மிகவும் மோசமான பின்னடைவை கண்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

வட்டிவீதம் உயர்ந்த நிலையில் காணப்படுவதால் மக்கள் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டிருப்பதை மறந்துவிட வேண்டாம். செலாவணி வீதம் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதால் பொருளாதார அரசியல் ரீதியில் ஒரு நம்பிக்கையற்ற நிலை அதிகரித்துக் காணப்படுகின்றது.

2015 முதல் 2017 வரையான காலப் பகுதியில் சர்வதேச மட்டத்தில் எரிபொருள் விலை மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டது. எரிபொருள் பீப்பாய் 40 டொலராக குறைந்திருந்தது. என்றாலும் பொருளாதாரத்தை பலப்படுத்திக்கொண்டதாக எம்மால் பார்க்க முடியவில்லை. வெளிநாட்டு கையிருப்பு 8 பில்லியன் டொலர் அளவு இருப்பதாக அறிக்கைகள் கூறினாலும் அது வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொண்டதன் மூலம் கட்டியெழுப்பப்பட்டதென்பது எமக்கு வெளிப்படையாகக் காண முடிகிறது.

வரவு — செலவு துண்டு விழும் தொகை 5 வீதமாகக் காணப்பட்டாலும் அபிவிருத்திக்கான நிதியை குறைத்ததாலேயே அது உருவானது. அபிவிருத்தித் திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. முழு நாட்டு மக்களுக்கும் பொருளாதார இலாபம் பகிர்ந்துபோகும் விடயத்தில் பொருளாதார கொள்கை இந்த நான்கு வருடங்களில் உருவானதாக எம்மால் காண முடியவில்லை. மக்கள் கூடுதலாக வாழும் கிராமியப் பொருளாதாரம் மிகவும் பின்னடைவு கண்டுள்ளது.

நகர்புற சூழல் சீராகக் காணப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நகரங்களில் நாங்கள் இருப்பதால் இந்த நிலையை எம்மால் நன்றாகக் காணமுடிகிறது. குப்பை கூளங்களை அகற்றுவதில்கூட ஒழுங்கான திட்டங்கள் எதுவும் கிடையாது. ஆறு மாகாண சபை நிர்வாகங்களிலும் மக்கள் பிரதிநிதிகள் புறந்தள்ளப்பட்டு அதிகாரிகளின் கரங்களுக்கு எடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு விதத்தில் திட்டமிட்ட சர்வாதிகாரத்தின் பக்கம் போவதாகவே நோக்கவேண்டியுள்ளது. இதுதான் யதார்த்தம்

ஜனநாயகம் பற்றி பேசுபவர்கள் தேர்தல்களை நடத்தாமல் இருப்பதால் அனைத்தும் செயலிழந்து போனதுபோன்றே காணப்படுகின்றது. பிரதேச சபை தேர்தல்கள் பின்போடப்பட்டன. பின்னர் அது நடத்தப்பட்டது. இப்போது ஆறு மாகாண சபைகளின் ஆட்சிகாலம் முடிவடைந்துள்ளது.

25 வருடங்களாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் தேர்தல் நடக்கவில்லை. 25 வருடங்களுக்கு பின்னரே அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. எமது பதவிக் காலத்திலேயே அங்கு தேர்தல்களை நடத்தினோம். வடக்கில் பெருமளவான பிரச்சினைகள் உருவானது. என்றாலும் நாம் அங்கு தேர்தலுக்கு முகங்கொடுத்தோம். அவற்றின் பதவிக் காலம் இப்போது முடிவடைந்துள்ளது. மாகாண சபைகளின் தேர்தல்களை பிற்போட்டு 25 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தை நாம் முன்னெடுத்து மீண்டும் அங்கு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்தோம். தேர்தல்களை பின்போடுபவர்கள் ஜனாதிபதியால் 11 நாட்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்காக பாரிய விமர்சனங்களை முன்னெடுக்கின்றனர்.

நவம்பர் மாதம் 05 திகதி பாராளுமன்றம் கூட்டப்படவிருந்தது. அதுவரையில் விடுமுறை. 05 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையில்தான் இப்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது வேறெந்த ஜனாதிபதிகளும் செய்யாதவொன்றாக பார்க்கின்றனர். நானும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தவன்தான். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கூட பல மாதங்கள் பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தார். அதனை அவரது புதல்வர்கூட மறந்துவிட்டார். இதுதான் உண்மையான நிலை. அனைத்து ஜனாதிபதிகளும் இதனைச் செய்திருக்கின்றார்கள். இதில் எந்த புதுமையும் கிடையாது. உண்மையில் 11 நாட்கள் தான் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையை முழு உலகுக்கும் காட்டி நாடு ஏகாதிபத்தியத்தின் பக்கம் செல்கின்றதென்று காட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். நாடு குழப்பமடைந்துள்ளது என்று கூறுகின்றனர். எந்தவொரு குழப்பமும் கிடையாது.

எமக்கு இந்த அமைச்சில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். சகல தரப்பினருக்கும் பொருளாதார பிரதிபலன்கள் கிடைக்கும் திட்டமொன்றும் எமக்கு அவசியம்.

சகல மக்களுக்கும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் திட்டமொன்றை தயாரிப்பதே ஜனநாயக மக்கள் பிரதிநிதியின் செயற்பாடாக இருக்க ​வேண்டும். வரி முறை இலகுவானதாக இருக்க வேண்டும். மக்களும் உள்நாட்டு வர்த்தகர்களும் வரி செலுத்தக் கூடிய இயலுமை தொடர்பில் ஆராய்ந்தே வரி விதிக்க வேண்டும். வரி விதித்து மக்களை சுரண்டி வாழ்வது உகந்ததல்ல.

வரி செலுத்துவதற்கேற்ற உற்பத்தியும் வருமான வழியும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஏதோ ஒரு சூத்திரத்தை செயற்படுத்துகின்றனர். இது தொடர்பில் நிதி அமைச்சு மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. எவ்வளவு விலை உயரும் என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் ஸ்திரமற்ற நிலை உருவாகியுள்ளது. இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். வேறு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். சூத்திரத்தினூடாக மாதாந்தம் விலை அதிகரிக்க முடியாது. விலை குறைவதாக தெரியவில்லை.

அரசாங்கத்திற்கு பணம் தேவை. அது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பணமாக இருக்க முடியாது. வாழ்க்கை செலவு குறித்து சிந்தித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். சர்வதேச நிதித் சந்தையின் நிலைமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எமது நாட்டு வெளிநாட்டு கையிருப்பை பாதுகாக்க வேண்டும்.

ஏற்றுமதி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு விநியோகம் அடங்கியதாக நாட்டுக்கு உகந்த பொருளாதார கொள்கையை தயாரிக்க வேண்டும். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் முன்னின்று செயற்பட முடியும். யுத்தம் இடம்பெறுபோது கூட கடனும் கடன் தவணையும் தாமதமின்றி மீளச் செலுத்தப்பட்டது. அந்த நிலைக்கு மீள வர வேண்டும். உள்நாட்டு உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. மத்தளையூடாக வெளிநாடுகளுக்கும் நெல் ஏற்றுமதி செய்ய முடிந்தது.சோளம் உற்பத்தியில் தன்னிறைவு கண்டோம். வெளிநாட்டு விவசாயிகளுக்காக நாம் பணம்செலவு செய்யவில்லை. எமது நாட்டு விவசாயிகளுக்காகவே பணம் செலவிட வேண்டும். அந்த நிலைமை மீள ஏற்படுத்த வேண்டும். எமது நாடு அதிஷ்டமான நாடாகும். நாம் வருவது தெரிந்து எம்மை ஆசிர்வதிப்பது போன்று மழை கூட பொழிகிறது.

வரட்சி இல்லாததால் எதிர்வரும் போகத்தில் உச்சபட்சம் பயிரிட நாம் ஊக்குவிப்பு வழங்க வேண்டும்.மின் உற்பத்திக்கு தேவையான நீர் கையிருப்பில் இருக்கிறது.

இலங்கையில் உற்பத்தி செய்யக் கூடிய ஊதுபத்தி கூட வெளிநாட்டிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மக்களின் கையில் பணம் புழங்கக் கூடிய திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும். 25 மாவட்டங்களிலும் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாம் விவசாயிகளுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குகிறோம். உரிய நேரத்தில் பசளை மற்றும் எரிபொருள் என்பவற்றை வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.

இது தொடர்பில் திஸ்ஸமஹாராமையில் நடைபெற்ற ஏர்பூட்டு விழாவில் ஜனாதிபதி தெளிவாக கூறியிருந்தார். விவசாயத்துக்கு முழுமையான ஊக்குவிப்பு வழங்க வேண்டும்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது நிதி அமைச்சர் என்றவகையில் நிதி அமைச்சுக்கு வந்துள்ளேன். தற்பொழுது பிரதமராக நிதி அமைச்சுக்கு வந்திருக்கிறேன். இனிமேல் நாடு சர்வதேசமயமாவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிள்ளைகளுக்காக நாட்டை மிச்சம் வைக்குமாறு மக்கள் கோருகின்றனர்.எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அதனாலே எத்தகைய பிரச்சினைகள் இருந்த போதும் நாம் இணைந்திருக்கிறோம். எனக்கு இவற்றை கைவிட்டு செல்வது இலகுவானது.

நான் ஜனவரி 9 ஆம் திகதி காலை 6 மணிக்கே பெறுபேறு வெளியாக முன்னர் சிரித்தவாறு கையசைத்தபடி வெளியேறினேன். சிலருக்கு அவ்வாறு செல்ல முடியாது. சிரித்த படி கையசைத்து செல்லாமல் அழுதபடி இன்னும் தங்கியிருக்கின்றனர். ஆனால் வெளியிலுள்ள மக்கள் அவர்களை பார்த்து சிரிக்கின்றனர்.

நாம் நாடு குறித்தும் இனம் குறித்தும் சிந்திக்க வேண்டும். நாம் இணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும். காங்கேசன்துறையிலிருந்து தேவேந்திரமுனை வரை முழு நாட்டையும் சகல மக்களையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related Post

மஹிந்தவின் குடும்பத்தையே கொலை செய்ய சதி

Posted by - September 26, 2018 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை மாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி இடம்பெற்றுள்ளமைக்கான தகவல்கள்…

இலங்கை வங்கியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Posted by - September 26, 2018 0
இலங்கையின் அரச வங்கியின் ATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. வெலிகம…

பத்திக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

Posted by - November 22, 2018 0
நாட்டில் பத்திக் (Batik) கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிராமிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. தொழிலற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு தூக்கு

Posted by - October 19, 2018 0
6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து, இறந்த சிறுமியின் தந்தை முன்னிலையில் அந்த காமுகனுக்கு…

பிரான்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கை தமிழருக்கு ஏற்பட்ட நிலை!

Posted by - September 26, 2018 0
பிரான்ஸ் ஊடாக சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த இலங்கையர் தமிழர் ஒருவர் மலேசிய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய கடவுசீட்டை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர்…